~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா : 42
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் வதூத் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அல் பர்ரூ பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
اِنَّا كُـنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُ اِنَّهٗ هُوَ الْبَـرُّ الرَّحِيْمُ
நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்! நிச்சயமாக அவனே பேருபகாரம் செய்பவன்! இணையிலாக் கிருபையாளன்!
(சூரத்துல் : அத் தூர் : 28)
• மேலே உள்ள வசனத்தில் அல்பர் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது! அல்பர் அர்ரஹிம் என்ற இரண்டு பெயர்களை அல்லாஹ் இங்கே சேர்த்து குறிப்பிடுகின்றான்!
• அல்பர்ரூ என்றால் - பேருபகாரம் செய்பவன் என்பது பொருள்! அல்லாஹ் பேருபகாரம் செய்பவன் என்பதை உலமாக்கள் இரண்டாக பிரித்து தெளிவுபடுத்துகிறார்கள்!
1) பொதுப்படையாக பேருபகாரம் செய்பவன்!
2) குறிப்பாக பேருபகாரம் செய்பவன்!
பொதுப்படையாக பேருபகாரம் :
• பொதுவாக மனிதனை அழகிய வடிவில் படைத்து அவன் வாழ்வதற்கு எல்லாவற்றையும் கொடுப்பது அல்லாஹ்வின் பொதுவான பேருபகாரம் ஆகும்!
وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا
மேலும், ஆதமுடைய மக்களைத் திட்டமாக நாம் கண்ணியப்படுத்தினோம், கரையிலும், கடலிலும் நாம் அவர்களை சுமந்து சென்றோம், நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு நாமே உணவளித்தோம், நாம் படைத்தவற்றில் அனேகவற்றை விட (தகுதியில்) நாம் அவர்களை மிகமிக மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றோம்!
(சூரத்துல் : பனீ இஸ்ராயீல் : 70)
குறிப்பான பேருபகாரம் :
• அல்லாஹு தஆலா படைத்த படைப்புகளில் சிலருக்கு ஹிதாயத்தை (நேர்வழி) கொடுத்து, அந்த ஹிதாயத்தில் அவர்களை நிலைத்திருக்கச் செய்வது!
• மேலும் அவனுடைய ஹிதாயத்தை பெற்ற நல்லடியார்களுக்கு எல்லா காரியங்களையும் இலகுவாக்கி கொடுக்கிறான்! மேலும் அவர்களுடைய சங்கடங்களையும் கஷ்டங்களையும் அகற்றுகிறான்!
• அல்லாஹ்வை சார்ந்த இருக்க கூடிய அடியார்கள் சிறிய அமல்கள் செய்தாலும் நிறைவான கூலியை அவர்களுக்கு கொடுக்கிறான்! இதுவே குறிப்பான பேருபகாரம் ஆகும்!
• ஹிதாயத் பெற்ற அடியான் ஒரு தீமை செய்ய நினைத்தால் அந்தத் தீமை எழுதப்படுவதில்லை! அந்த தீமையை செய்தால் மட்டுமே ஒரு தீமையாக எழுத சொல்கிறான்! ஆனால் நன்மை செய்ய நினைத்தாலே அதை ஒரு நன்மையாக எழுதச் சொல்கிறான்!
• அப்படியே அந்த நன்மையை செய்தால் அதற்கு பல மடங்காக கூலியை அதிகரித்து எழுதுமாறு மலக்குகளுக்கு கட்டளையிடுகிறான்! இது அல்லாஹ்வின் பேருபகாரம் ஆகும்!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது,
ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான்! அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான்!
ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6491)
• அல்லாஹ்வை ஈமான் கொண்டு நேர்வழியில் இருக்கும் அடியார்கள் பாவம் செய்யும் போது அவர்கள் தவ்பா செய்வதற்கான வாசலை உயிர் தொண்டைக்குழியை அடைகிற வரைக்கும், கிழக்கில் உதிக்கிற சூரியன் மேற்கில் உதிக்கிறவரைக்கும் திறந்து வைத்திருப்பது அல்லாஹ்
நல்லடியார்களுக்கு செய்யும் பேருபகாரம் ஆகும்!
(நூல் : சுனன் திர்மிதி : 3537)
• மறுமையில் அல்லாஹ் தன் அடியாரின் பாவங்களை மன்னித்து மறைத்து விடுவான்!
(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹுதஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான்! பிறகு அவனை நோக்கி, ‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்பான். அதற்கு, அவன் ‘ஆம், என் இறைவா!’ என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், ‘நாம் இத்தோடு ஒழிந்தோம்’ என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன், ‘இவற்றையெல்லாம்உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்’ என்று கூறுவான். அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2441)
• அல்லாஹ் தன் அடியானுடைய பாவத்தை மன்னித்து பேருபகாரம் செய்வான்! அல்லாஹ் அல்பர். பொதுவாக எல்லோருக்கும் பேருபகாரம் செய்கிறான்!
• குறிப்பாக நல்லடியார்களுக்கு பேருபகாரம் செய்கிறான்! அல்லாஹ் அல்பர் என்று அறிந்தால் அவன் மீது நம்பிக்கையும் மஹப்பத்தும் (நேசம்) ஏற்படும்! நல்லறங்கள் அதிகமாக செய்ய வேண்டும் என்ற ஆசை வரும்!
• எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு நமக்கு அருள் பாலிப்பானாக ஆமீன்!
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அற் றஊஃப் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன்
Post a Comment